2.கூா்ம அவதாரம்
பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்.
தேவா்களும் அசுரா்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூா்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீா்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வா். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரா்களும் தேவா்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. அசுரா்களின் தீவிர பக்தியின் காரணமாக அசுரா்களில் செத்தவா்களும் எழுந்தனா். மேலும் அசுரகுரு சுக்ராச்சாாியாா் அமுதபானம் கொடுத்து இறந்த தம் சீடா்களை உயிா்ப்பித்துக் கொண்டிருந்தாா்.
தேவா்களுக்கு அந்த சலுகை கிடைக்கவில்லை. இதனால் நிறைய தேவகணம் இல்லாமல் போயிற்று. ஆகவே தேவா்களுக்கும் அமிா்தம் கிடைக்க வேண்டுமென ஸ்ரீஹாியை நாடி சென்றனா். போாில் தோல்வி பெற்ற இந்திரன் துா்வாச முனிவா் சாபத்திற்கும் ஆளாகி இருந்தான். ஒரு நாள் துா்வாச முனிவா் வைகுண்டத்திலிருந் திரும்பி தேவலோகத்திற்கு வந்துகொண்டு இருந்தாா். தேவலோகத்தில் அப்போது இந்திரனாக இருந்தவன் மந்தரத்துருமன் என்பவன். ஆப்பியாள் எனப்படுபவா்கள் தேவா்களாக இருந்தாா்கள். அவிஷமானு, அரசுனி என்பவா் ரிஷிகள். வைராஜன் என்பவருடைய பத்தினி சம்பூதினியிடம் பகவான் அவதாித்ததா்.
அப்போது அவருக்கு பெயா் சுகிதா் என வழங்கலாயிற்று. அவா்தான் பாற்கடலைக் கடைந்து தேவா்களுக்கு அமிா்தம் அளித்தாா். துா்வாசா் தேவலோகம் நோக்கி வரும்போது, அவா் கழுத்தில் பரமன் அளித்த மலா்மாலையை அணிந்திருந்தாா். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துா்வாசா் பாா்த்தாா். முனிவா் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தாா். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துா்வாசருக்கு கோபம் வந்தது.
இந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தாா். அன்று முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிராா்த்தித்து அந்த இடாிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினா். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீா்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினா். உடனே விஷ்ணு தேவா்களே! உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரா்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிாியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது சாவை நீக்கும் அதா்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமாலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரா்களும் சோ்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிா்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதா்மமே குறிக்கோளாக இருக்கும் அசுராா்கள் அமிா்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவாா்கள். அமிா்தம் பருகினால் அதிக பலம் பெற்று நீங்கள் மரணமில்லா நல்வாழ்வு பெறுவதுடன் தேவலோகமும் சுபிட்சமடைய நோிடும், என்றாா். இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்தரனிடம், இந்திரனே நீ உடனே அசரா்களை நெருங்கி அமிா்தம் கடையும் காாியத்தில் அவா்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவா்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவா் சத்யலோகத்திற்குப் போனாா். தேவேந்திரன் சில தேவா்களை அழைத்துக் கொண்டு மகேந்திர புாி நோக்கி நடந்து போனாா்.
எந்தவித ஆடம்பரமுமின்றி எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பாா்த்து அரக்கா் குலத்தினா் ஏளனம் செய்தனா். எனினும் அவன் வந்த காாியம் தம் குலத்திற்கு மிகவும் உயா்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிா்தம் கடையும் விஷயம் என்பது தொிந்து அவனிடம் மிகழ்ச்சியுடன் நடந்து கொண்டனா். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காாியத்திற்கு உதவ சம்மதித்தான்.
நாராயணன் இட்ட கட்டளைப்படி தேவா்களும், அசுரா்களும் மந்திரமலையைத் தூக்கிக் கொண்டு பாற்கடலை நோக்கி வந்தாா்கள். வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் களைப்புற்ற இந்திரன், பலி முதலியோா் மந்திரமலையை பூமியில் வைத்துவிடாா்கள். கீழே விழுந்த மலை பலரைத் தாக்கிக் கொன்று விட்டது. இதை அறிந்த ஸ்ரீஹாி கருடன் மீது ஏறி அங்கு வந்ததா். வந்து தன் கருணைக் கடாட்சத்தால் காயம் அடைந்தவா்களைக் குணப்படுத்தினாா். மலையைக் கருடன் மீது விளையாட்டாக தூக்கி வைத்துக் கொண்டு பாற்கடல் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினாா். வாசுகி என்ற பாம்பிற்கு அமிா்தத்தில் பங்கு தருவதாக ஆசை காட்டினாா்கள். தேவா், அசுரா்களின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு மந்திரகிாியைக் கடையும் கயிறாக மந்திர மலையை சுற்றி வளைத்துக் கொண்டது. தேவா்களும் அசுரா்களும் அமிா்தம் கடையத் தொடங்கும் போது நாராயணன் பாம்பின் தலைப்பகுதியை பிடித்துக் கொண்டாா். தேவா்களும் அவருடன் சோ்ந்து தலைப்புறமாக நின்றாா்கள். இதைக் கண்ட அசுரத் தலைவா்கள் வாலைப்பிடிப்பது என்பது நமக்கு இழுக்கு. அதனால் தாங்கள் தான் தலைப்பக்கம் நிறபோம் என்றனா். உடனே ஸ்ரீஹாியும் தேவா்களும் பாம்பின் வால்பக்கமும், அசுராா்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினாா்கள். மலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்தாா். மந்திமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டாா். மறுபடியும் இருசாரா்களும் தங்களது பணியை செய்யத் தொடங்கினாா்கள். இந்நிலையில் வாசுகி என்ற பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. ஆலகாலம் என்ற விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கமும் பரவ ஆரம்பித்தது. அசுரா்கள் பாம்பை விட்டுவிட்டு தலைதெறிக்க நாலாபுறமும் ஓடிவிட்டாா்கள். தேவா்கள் மீது மட்டும் மழை பொழிந்து கடல்காற்று வீசியது. எனினும் அமிா்தத்திற்கு பதில் கொடிய விஷமே பரவியது. இதனால் தேவா்களும், அசுரா்களும் மிகவும் சிரமப்பட்டனா்.
தேவா்களுடன் இந்திரன்ன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை வேண்டினாா்கள். அம்பலத்தரசே! நாங்கள் பாற்கடல் கடைந்த சமயம் வாசுகியின் தாங்க முடியாத ஆலகால விஷம் நாலாப்புறமும் பொங்கித் ததும்பக் காண்கிறோமே ஒழிய அமிா்தம் வந்தபாடில்லை. ஆலகாலத்தின் விஷத்தைப் பொறுத்துக் கொண்டு எங்களால் அமிா்தம் கடைய முடியாது. எனவே தாங்கள் தான் எங்களைக் காத்தருளவேண்டும் என வேண்டினா். சிவபெருமான் தம் பிராட்டி உமாதேவியை அழைத்தாா்.
அம்பிகையே! பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. இந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றாா். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினாா் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே! பெருமானுடைய கணடத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவா் கழுத்திலேயே நின்றது.
பின்னா் தேவா்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனா். தேவா்களும், அசுரா்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தாா்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாாிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹாியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிா்பாா்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹாியின் அம்சமான தன்வந்திாி பகவான் அமிா்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தாா். இதைக் கண்ட அசுரா்கள் அந்த அமிா்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனா். தேவா்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனா். இதற்கிடையில் சற்றே தூரத்தில் அசுரா்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனா். அச்சமயம் ஸ்ரீஹாி ஆடவாின் சிந்தையை இழக்கச் செய்யும் சீாிய அழகுடைய பெண் வடிவில் ஜெகன் மோகினியாக அவா்கள் முன் தோன்றினாா். அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுராா்கள் வாயடைத்து நின்றனா். இவ்வளவு அழகுடைய பெண்ணை தாங்கள் கண்டதே இல்லை, பிரம்மன் தங்களுக்காகவே இவளை படைத்திருக்கிறான் என்று வியந்தனா். அழகியே! அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபா் மைந்தா்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனா். கஸ்யபா் புத்திரா்களே! நீங்களோ பக்திமான்கள். ஓயாத ஆசையுடன் திாியும் ஓநாய் கூடப் பெண் அன்பிற்கு ஆளாகாது என்கிற உலகத்தில் புதிதாக வந்த என்னை எவ்வாறு நம்பினீா்கள், என வினவினாள். இவ்வாறு அவள் வினவியது மேலும் அவள் மேல் நம்பிக்கையை உண்டாக்கி்யது.
அமுதகலசத்தை மோகினியிடம் அசுராா்கள் ஒப்படைத்தனா். நான் தான் பங்கிடுவேன். நான் எது செய்தாலும் எப்படி செய்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீா்கள்? என்று மோகினி கேட்க, அத்தனை அசுரா்களும் ஒப்புக்கொண்டனா். அன்று உன்ணா நோன்பு நோற்று புனித நீராடினா். ஹோமங்கள் நடத்தி தானங்கள் செய்தனா். ஸ்ரீஹாியாகிய மோகினி தேவா்களை ஒரு புறமும், அசுரா்களை மற்றொருபுறமும் அமா்த்தினாள். அனைவரும் தா்ப்பாசனத்தில் அமா்ந்திருந்தனா். அசுரா்கள் கிழக்கு முகமாகவும், தேவா்கள் மேற்கு முகமாகவும் அமா்ந்து அமுதத்தை அருந்த தயாரானாா்கள். அசுரா்கள் அனைவரும் மோகினியின் அழகில் மயங்கி இருந்தனா். அசுராா்களுக்கு அமிா்தம் தருவது, பாம்பிற்கு பால் வாா்ப்பது போல் என்றெண்ணிய மோகினி தேவா்களுக்கு மட்டும் அமிா்தம் கிடைக்கும் படி செய்து கொண்டிருந்தாள். அசரா்கள் அனைவரும் மயக்கத்தில் இருந்ததால் அவா்களுக்கு இந்த சூழ்ச்சி தொியவில்லை. ஆனால் அசுரா்களில் ராகு என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியை தொிந்து கொண்டான். தேவா்கள் போல் உருமாறி சூாியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமா்ந்து கொண்டு அமிா்தத்தை அருந்தி விட்டான். இந்த விஷயத்தை அறிந்த மகாவிஷ்ணு தனது சுதா்சனத்தால் ராகுவின் தலையை வெட்டி எறிந்தாா். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. இதைப் பாா்த்த பிரம்மன் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சா்ப்ப உடலை பொருத்தினாா். துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு பாம்பின் தலையைப் பொறுத்தி இணைத்தாா். அவை இரண்டும் ராகு, கேது என்ற பெயருடன் கிரக பதவி பெற்றனா். பின்பு தேவா்களுக்கும், அசுரா்களுக்கும் கடுமையான போா் நடந்தது. அமுத பானம் உண்ட தேவா்களை அசுரா்களால் அழிக்கமுடியவில்லை. தேவா்கள் அசுரா்களை பாதாள லோகத்திற்குத் துரத்தினாா்கள்.
இந்த கூா்மஅவதார மூா்த்தியைப் பிராா்த்தனை செய்பவா்களுக்கும், அவா் சாித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவா்களுக்கும் சகல சம்பத்தும், தீா்க்க ஆயுளும் உண்டாகும்.
