வடபழநி ஆண்டவா் தல வரலாறு

வடபழநி ஆண்டவர் கோயில் உள்ள இடத்தில் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் சாலிகிராமம் என்னும் பகுதியில், அண்ணாசாமி நாயகர் வாழ்ந்து வந்தாா். அவருடைய தாயார், தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை. இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொல் பேசும் இயல்பும் உடையவராக இருந்தார்.
பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீஸ்வரர் கோயிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஒருவரிடம் அனுப்பிக் கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அவருக்கு படிப்பில் நாட்டம் செல்ல வில்லை. நாளடைவில் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டார் . ஆனால் அவருக்கு இறையண்பு மட்டும் பெருகி வளர்ந்து வந்தது. உாிய வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களைப் பெற்ற இவர், வயிற்றுவலி நோயால் மிகவும் துன்பமுற்று இருந்தார்.

அண்ணாசாமி நாயக்கருக்கு தீராத வயிற்று வலி. ஒருநாள் பழநியில் இருந்து, தல யாத்திரையாக வியாக்கிரபுரீஸ்வா் கோயிலுக்கு சாது ஒருவா் வந்தாா். அவா், தம்பி கவலை வேண்டாம். வேலுண்டு வினையில்லை… மயிலுண்டு பயமில்லை… என்று சொல்லி திருப்போரூா் சென்று வழிபட்டு வா என்றாா். அவ்வாறே நாயக்கரும் மனம் தளராமல் திருப்போரூர் சென்று முருகனை வழிப்பட்டு திரும்பினார்.

அடுத்த கிருத்திகைக்குத் திருப்போரூர் செல்லப் புறப்பட்ட போது, பெரும் மழை பெய்து இடையிலுள்ள ஆற்றில் வெள்ளம் மிகுந்து, நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படகில் சென்றவர்களும் வெள்ளம் கண்டு திரும்பிவிட்டனர். ஆனால் அண்ணாசாமி நாயக்கர் மட்டும் மனம் சிறிதும் தளராமல், திட சித்தத்துடன் வெள்ளத்தை நீந்திக் கடந்து திருப்போரூர் சென்று வழிப்பட்டே திரும்பினார். ஊர் மக்கள் அவர்தம் பக்தியின் பெருக்கையும், உள்ளத் திண்மையையும் வியந்து புகழ்ந்தனர். திருப்போரூர் சென்று தொழுதும் வயிற்று வலி தீர்வதாக இல்லை என்றாலும் அவர் மனம் தளராமல் நான் திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டே வருவேன் என்று கூறி,

மூன்றாம் முறையும் அண்ணாசாமி நாயக்கர் திருப்போரூர் சென்று முருகனைப் பணிந்து வழிப்பட்டார். வழிபாட்டை முடித்துக்கொண்டு கண்ணுப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் சந்நிதியின் எதிரில் இரவு படுத்து உறங்கினாா். அப்போது கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கின்ற பொழுது அங்கேயே நீ முருகனை வழிப்பட்டு மகிழலாமே! என்று கூற கேட்டு உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்த அண்ணாசாமியார், முருகன் அருளை நினைத்து உருகி தொழுது வீட்டுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். செய்தியை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிவித்து, அன்று முதல் தம் வீட்டிலேயே காலை மாலை இருவேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து கொண்டு வந்தார்.

அப்போது அவருக்குப் பழநியில் இருந்து வந்த சாது, முன்னர் சொன்னப்படி திருத்தணிகைக்குச் செல்ல வேண்டும் என்கின்ற விருப்பமும், அங்குச் சென்று ஏதேனும் காணிக்கை செலுத்தினால் தான் தம் நோய்தீரும் என்ற கருத்தும், பெரிதாக நிகழ்ந்து வந்தன. முருகனை வழிபடுகின்றபோது அவரை நாவாரப்பாடி மகிழவேண்டும் என்கின்ற விருப்பமும் அண்ணாசாமியாருக்கு உண்டாயிற்று. இளமையில் கல்வியறிவு இல்லாமல் போனதை எண்ணியெண்ணி வருந்தினார்.


திருப்போரூரில் அடியார்கள் திருப்புகழ் பாடி முருகனை வழிபட்ட காட்சியையும், ஆங்காங்கே பக்தா்கள்! கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, வேல் வகுப்பு, மயில் விருத்தம், திருப்போரூர்ச் சந்நிதி முறை முதலியவற்றைப் பாராயணம் செய்து கொண்டு அமர்ந்திருந்த அழகையும், நினைத்து நினைத்து தான் அவ்வாறு பாட முடியவில்லையே என்று ஏங்கினார். அவருக்கு ஏதோ ஓர் உள்ளுர்ணர்ச்சி தோன்றியது. முருகனைப் பாடாத நாக்கினைப் பெற்ற நாம் நமது நாக்கையே அவன் திருமுன் ஏன் பலியிட்டுக் காணிக்கை செலுத்தக்கூடாது? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. உடனே அவர் சிறிதும் தாமதிக்காமலும், தயங்காமலும் முருகா முருகா எனக் கூவிக் அழைத்து தமது சாவிக்கொத்தில் இருந்த சிறு கத்தியினை எடுத்து நாக்கை அறுத்து ஒரு இலையில் ஏந்தி பலிபீடத்தின் அடியில் வைத்து அடியற்ற மரம் போல தணிகை அண்ணலின் திருமுன் வீழ்ந்து வணங்கினார். பழநியில் வந்த சாது தெரிவித்தது போன்று புதுமையான காணிக்கை செலுத்திய மன நிறைவு அவருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த மக்கள் அண்ணாசாமியாரின் செய்கையை கண்டு மிகவும் வியப்புற்றனர். அச்சமும் அன்பும், பக்தியும் மதிப்பும் கலந்த ஒருவகை உணர்ச்சி அவர்களை ஆட்கொண்டது.


நாக்கு துண்டிக்கப் பெற்றதால் குருதி பெருக மயங்கிக் கிடந்த நாயகரின் முகத்தில், அன்பர்கள் சிலர் தண்ணீர் தெளித்து பணிவிடைகள் செய்தனர். நாக்கை அறுத்து இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்குப் பாவாடம் என்று மக்கள் பெயர் வழங்குவர். நாயகர், முருகனுக்குத் தமது நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்திய இடமே திருத்தணிகையில் இப்போது பாவாட மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. நீண்ட நேரம் கழித்து நாயகர் கண்விழித்தார். வாய் பேச வராத நிலையிலும், நாயகர் முருகாமுருகா என குமுறிகுமுறி முணுமுணுத்தார். கோயிலை வலம் வந்தார். அருகில் இருந்த படக் கடையில் முருகன் படம் ஒன்றை பார்த்து வணங்கினார். யாரோ ஒரு அன்பர்! உடனே அப்படத்தை வாங்கி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். அண்ணாசாமியார் தமக்கு அந்த முருகன் படம் கிடைத்ததைப் பெரும்பேறு என்று கருதி அதைத் தம் தலைமேல் வைத்துக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடி இன்புற்றார். இங்ஙனம் திருத்தணிகை வழிபாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் அவர் சென்னை வந்து சேர்ந்தார். திருத்தணிகையில் இருந்து கொண்டு வந்த படத்தைத் தமது வீட்டில் வைத்து வழிபாடு செய்து கொண்டு வந்த நாயகருக்கு அதற்குப்பின் வயிற்று வலி ஏற்படவேயில்லை. அவர்தம் நோய் அறவே அகன்றொழிந்தது. சிலநாட்களில் அவர்தம் நாக்கும் நன்கினிது வளர்ந்து விட்டது.

அவர்தம் அன்பின் பெருக்கையும், பக்தி உணர்வையும், மனத்திண்மையையும் அறிந்த அன்பர் பலர் அவரிடம் வந்து பேசுவதனுடன் தமது குறைகளையும் கூறி, அவை தீரும் வழி என்னவென்று கேட்க தொடங்கினாா்கள். நாயகர் அவர்களுக்கெல்லாம் ஒன்றும் விடை கூற இயலாத நிலையில் முருகனை வழிபடும்படி சொல்லி அனுப்பிவிடுவார். இந்நிலையில் நாயகர் அவர்களுக்குப் பழநி செல்லவேண்டும் என்ற ஆா்வம் அதிமாக இருந்தது. ஒருநாள் திடீரென்று நாயகர் கால்நடையாகவே பலதலங்களையும் தரிசித்து கொண்டு பழநி சென்று அடைந்தார். ஆரா அன்புடன் வலம் வந்து முருகனை வழிபட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தாா். பழநியில் சில நாட்கள் பக்தி பெருக்குடன் தங்கி மகிழ்ந்து இன்புற்றார்.

அப்போது அவருக்கு மேலும் பழநி முருகன் மேல் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது. ஒரு நாள் அவர் ஞான தண்டாயுதபாணியை மலை மேற்சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கிழிறங்கி வந்தார். வழியில் படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. அதன்பால் ஈடுபட்டு நாயகர் அதனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டார். அப்படத்தை விலைக்கு வாங்கிக்கொள்வதற்கு அவர் கையில் பொருள் ஏதுமில்லை. ஆயினும் அவர் அதனைப் பெறவேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருந்தது.

அன்றிரவு அந்தப் படத்தை நாயக்கருக்கு தரும்படி கடைக்காரர் கனவிலும், அதைப் பெற்றுக் கொள்ளும்படி நாயகர் கனவிலும் ஆண்டவர் அருள் புரிந்தார். மறு நாள் நாயகரைக் கண்டதும் கடைக்காரர் படத்திற்கு பூமாலை தரித்து மிகவும் அன்புடன் நாயகர் அவர்களிடம் தாமே வலிய வந்து கொடுத்து வணங்கி மகிழ்ந்தார்.
நாயகர் அவர்கள் அந்தப் படத்தைப் பெருஞ்செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அதனை வைத்து அதனைப் பழநி ஆண்டவர் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். சிறிய கீற்றுக் கொட்டகையொன்று போட்டு தம் குடும்பத்தை வேறு இடத்திற்கு இடம் பெயரச்செய்தார். தாம் குடும்பத்தில் இருந்து விலகித் துறவு நெறி மேற்கொண்டு காவி உடைபுனைந்து ஆண்டவர் சன்னதியிலேயே இருக்க முடிவு செய்தாா். குறிகேட்டுவரும் அன்பர்கள் மனம் உவந்து கொடுக்கும் காணிக்கையை கொண்டு ஆண்டவருக்கு வழிபாடு முதலியவற்றை சிறப்புற நடத்தி வந்தார்.

அன்று முதல் நாயகர்க்கு அண்ணாசாமி தம்பிரான் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. 1863-ம் ஆண்டு சஷ்டியின் போது ஒரு வெள்ளிக்கிழமையன்று முதன்முதல் இரத்தினசாமிசெட்டியாா், அண்ணாசாமி தம்பிரான் அவர்களை கண்டார். இரத்தினசாமி செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த அண்ணாசாமி தம்பிரான் நமக்குபின் இவ்வழிப்பாட்டை தொடர்ந்து செய்யக் கூடியவர் இவா் தான் என்று எண்ணி இரத்தினசாமிச் செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா? என்று வினவினார்.

இரத்தினசாமி செட்டியாா் எதிர்பாராத நிலையில் வினா எழவே, மிகவும் தயங்கி அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே! என்னால் எங்ஙனம் இயலும்? ஏதேனும் என்னால் இயன்ற தொண்டுகளை செய்துவருகிறேன் என்று பணிவுடன் தெரிவித்தார். அது கேட்ட தம்பிரான் இக்கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்குப் பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டும் என்று உள்ளம் விரும்புகின்றது. தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா? என்றார். உடனே செட்டியார் அப்படியே செய்யலாம் என்றாா். தங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது. தாங்களே வாய் திறந்து சொன்ன பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை? இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளை செய்யலாம். தாங்கள் இசைவு தெரிவித்தால் பழனி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைப்பித்து, கோவில் நிறுவி கும்பாபிஷேகம் விரைவில் செய்து விடலாம் என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார். அண்ணாசாமி தம்பிரான் ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு? தங்கள் உள்ளத்தில் தோன்றுகின்ற படியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி செட்டியாருக்குத் திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டார். மறுநாளே, செட்டியார் வண்ணையம்பதிக்குச் சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழநி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார். குறிமேடைக்கு அருகில் இப்போது வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் கருவறை பகுதி உள்ள இடத்தில் செங்கல்சுண்ணாம்பு கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. அன்பர்கள் பலர் செய்த பொருள் உதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது. இந்நிலையில் ஆவணி மாதம் அமாவாசைத் திதி மக நட்சத்திரம் அன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்து விட்டார்.
மறுநாள் இரத்தினசாமி செட்டியார் வீட்டுக்கு செல்ல விருப்பமின்றி அன்று மாலையில் கடைக்குச் சென்றார். மூடியிருந்த கடையைத் திறந்த போது காவியுடை தரித்த யாரோ ஒரு பெரியவர் அங்கிருந்து வெளிப்பட்டுச் செல்வது போலத் தோன்றக் கண்டார். கடையை அப்படியே விட்டு, அவர்தம் அடிச்சுவட்டைப் பின்பற்றி உடன் சென்றார். பெரியவரை அணுகவும் அவர்க்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை. பேசாமல் பின் தொடர்ந்தார். காவியுடை அணிந்தவர் குறிமேடை வரை வந்து அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார். பின் வந்த செட்டியார் உள்ளே புகுந்த போது பெரியவரைக் காணவில்லை. அதனால் திகைப்பும் வியப்பும் அடைந்தார் செட்டியார். அங்கிருந்தர்வகளும் நிகழ்ந்ததை அறிந்து வியந்தனா். இத்தகையை சில நிகழ்ச்சிகளால் செட்டியார் குடும்பப்பற்றுத் தவிர்த்து துறவு நெறியுணர்வு பெருகி ஆண்டவர் சந்நிதியிலேயே இருந்து கொண்டு வழிபாடு செய்யத் தலைப்பட்டடார். ஒரு நாள் அவர்தம் கனவில் ஸ்ரீ அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி அவரையும் தம்மைப் போலவே பாவாடம் தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அவ்வாறே ஓர் ஆடிக் கிருத்திகையன்று முறையாக நோன்பிருந்து வழிபாடுகள் செய்து நாக்கை அறுத்து இறைவன் திருமுன் வைத்து வழிபாடுகள் செய்து வழிபட்டார். அன்றே அவர் காவியுடையும் புனைந்துக் கொண்டு துறவி ஆனாா். மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினாா்கள். அடுத்த கிருத்திகை முதல் இரத்தினசாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார். பின் சில நாட்களில் அண்ணாசாமித் தம்பிரான் விரும்பிய படியே தொடங்கப் பெற்ற கோயில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது. பழநியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுக் கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது. வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே இரத்தினசாமித் தம்பிரான் திருக்கோயில் பூசை முதலிய செலவுகளை நன்முறையில் நடத்திக் கொண்டு வந்தார். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறிமேடையை, வடபழநி ஆண்டவர் கோயில் என்று வழங்கும்படி இரத்தினசாமி தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார். நாளடைவில் வடபழநிக் கோயிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவியது.

இரத்தினசாமித் தம்பிரான், சுமார் இருபது ஆண்டுகள் கோயிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார். அவருக்குப் பின்னர் சென்னை சைதாப்பேட்டையைச் சேந்தவரும், செங்குந்தர் குலத்தில் தோன்றியவரும் ஆன பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவர் இரத்தினச்சாமித் தம்பிரானின் அன்பிற்குரிய சீடராக அமைந்தார். அவரும் தம்குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப முறைப்படி நோன்பிருந்து துறவு பூண்டு காவியுடை புனைந்து வழிபாடுகள் நிகழ்த்தி தம் நாக்கை அரிந்து இறைவன் திருமுன் படைத்துப் பாவாடம் தரித்துக் கொண்டார். தம் குடும்பத்தில் தமக்குாிய சொத்தின் பங்கைக் கேட்கப் பெற்று பழநியாண்டவர் கோயில் பணிகளுக்கே பயன்படுத்தினார். தம் குருவின் திருவுள்ளம் மகிழும்படி கோயில் பூசைகளையும் முறையாக நடத்தி வந்தார். இவருக்கும், இறைவன் அருளால் குறி சொல்லும் ஆற்றல் உண்டாயிற்று. குருவும் சீடருமாக மனமொத்துப் பழநியாண்டவர்க்கு ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தனர். 1886 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரம் அன்று ஸ்ரீ இரத்தினசாமித் தம்பிரான் இறைவன் திருவடியை அடைந்தாா்.

பின்னர் பாக்கியலிங்கத் தம்பிரான் அவர்கள் கோயில் பணிகளை மிகவும் கண்ணுங் கருத்துமாக இருந்து அரும் பாடுபட்டு கவனித்து வந்தார். இப்போதுள்ள வடபழநித் திருக்கோயிலின் கர்ப்பகிரகமும், முதல் உட்பிராகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணியைச் செய்தவா் ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் அவர்களே ஆவாா். வடபழநி கோயிலுக்கு இவர் பாவாடம் தரித்துக் கொண்ட நாள் முதல் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பணிபுாிந்துள்ளாா். இவருடைய காலத்தில் தான் இவர்தம் சிறந்த அரும் பெரும் முயற்சியின் காரணமாகவே ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் பெரும் புகழ் பெற்றது. சொல்லியது சொல்லியபடியே தவறாது பலித்து வந்தது. அவர் தம் குறி சொல்லும் ஆற்றலால் அன்பர்கள் பெருந்திரளாக கூடி வந்தனர். கோயிலின் வளர்ச்சியும், புகழும் நன்கு பெருகின. இந்நிலையில் 1931-ம் ஆண்டு புரட்டாசித் திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரம் அன்று ஸ்ரீ பாக்யிலிங்கத் தம்பிரான் பழநி ஆண்டவர் திருவடியை அடைந்தார். அவருடைய பொன்னுடலும் அவருக்கு முன்னிருந்த தம்பிரான்களின் சமாதிக்கு அருகில் உரிய முறையில் பூசை, முதலிய சிறப்புகளுடன் சமாதி வைக்கப்பட்டது. இம்மூவருடைய, சமாதிப் பூசையும், வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு ஒரு பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. ஸ்ரீபாக்கியலிங்கத் தம்பிரானுக்குப் பின்னர் அவர்கள் முறையைப் பின்பற்றிக் குறி சொல்லத்தக்கவர் ஒருவரும் அமையவில்லை. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்றும் இருக்கின்றது. அங்கு அண்ணாசாமியார் பழநியிலிருந்து கொண்டுவந்த திருவுருவப்படம் இருக்கின்றது. மாதம் தோறும் சித்தர்கள் சமாதியில் மூவருக்கும் பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் அன்பர்களால் செய்யப்பட்டு வருகின்றது.

அருள்மிகு வடபழநி ஆண்டவர் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளாலும், அறங்காவலர்களாலும், தக்காராலும், சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. வாழ்வளிக்கும் நாதனாய், வரமளிக்கும் தெய்வமாய், வாரி வழங்கும் வள்ளலாய், ஸ்ரீ வடபழநி ஆண்டவரை வணங்கி எல்லா நலன்களும் பெற்று இன்புற்றுவாழ வேண்டுகின்றோம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!