பட்டீஸ்வரம்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் பட்டீஸ்வரம்.
பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு மகிழ்ந்த பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
கோயில் சிறப்புகள்:
விலகிய நந்தி:
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளியபோது, அவர் வருவது தெரியவேண்டும் என்பதற்காக நந்திதேவர் விலகி அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.
ராமரே சிவனை பிரதிஷ்டை செய்த இடம் :
வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொண்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.
ராமர், விஷ்ணுவின் அவதாரம் என்றபோதிலும், மூன்று மகாக்ஷேத்திரங்களில் மட்டும், ராமரே சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் ஒன்று, இந்தப் பட்டீஸ்வரம் திருக்கோயில். வாலியை மறைந்திருந்து அழித்து, யுத்த தர்மத்தை மீறியதால், சாயஹத்தி தோஷம் பெற்ற ராமபிரான், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திருக்கோயிலில் சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். தான் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு அபிஷேகம் செய்ய தன்னுடைய வில்லைக் கொண்டு ‘கோடி தீர்த்தம்’ உருவாக்கியிருக்கிறார்.
நாய் வடிவ சாபம் நீங்கிய இடம் :
மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
துர்க்கை அம்மன்:
இத்தலத்தில் துர்க்கை அம்மன் சாந்த சொரூபியாகவும், புன்னகை தவழும் முகத்துடனும் எட்டு கரங்களுடன் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார். ராகு காலத்தில் இங்கு செய்யப்படும் வழிபாடு மிகவும் பிரசித்தம். இங்குள்ள துர்க்கை சோழர் காலப் பிரதிஷ்டை.
விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.
திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் முதல் பாடலில் “மாட மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டர வினார்” என்று குறிப்பிட்டதால் இத்தலத்திற்குப் பண்டைநாளில் மழபாடி என்ற பெயர் இருந்ததாகத் தெரிகின்றது. சம்பந்தர் இப்பாடலில் இவ்வாலயத்து இறைவனை நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் என்று குறிப்பிடுகிறார்.
மூலவர் : பட்டீசுவரர், தேனுபுரீஸ்வரர்
அம்மன்: பல்வளைநாயகி, ஞானாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்)
புராண பெயர் : மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்
அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம். சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ. தொலைவு.
கும்பகோணம் – ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
முகவரி: அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோவில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
