16. கணம்புல்ல நாயனார்
வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து ஒளியூட்டுதல் சிறந்த பணி என நினைத்தார். எனவே கோவிலில் விளக்கிட்டு பாடி வழிபட்டு வந்தார்.
வறுமை அவரை வாட்டியது. தில்லைசென்று ஆடலரசை பலகாலம் வழிபட்டு வந்தார். வீட்டில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று திருப்புலீச்சுவரம் கோவிலில் விளக்கு ஏற்றி வந்தார். விற்பதற்கு அவரிடம் ஒரு பொருளும் இல்லை. அயலாரிடம் சென்று இரஞ்சுவதற்கு அஞ்சினார். உடல் உழைப்பால் அரிந்த கணம் புல்லைக் கொண்டுவந்து விற்று அதனால் கிடைக்கும் பெருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு செய்தார்.
சிவபெருமான் திருவிளையாடலால் ஒரு நாள் அவரது கையில் இருந்த கணம்புல் எதுவும் விற்பனையாகவில்லை. அதனால் விளக்கு எரிக்க அந்த புல்லையே திரித்து எரித்தார். தொடர்ந்து எரிக்க புல் இல்லை என்ற நிலையில் அன்புருகும் சிந்தையுடன் அவ்விளக்கில் தன் தலையை வைத்து எரிக்க முயன்றார்.சிவபெருமான் தடுத்து அருள் புரிந்து சிவலோகப் பதவிதந்தார்.
இறைவன்: தான்தோன்றீஸ்வரர்
இறைவி : அறம்வளர்த்த நாயகி
அவதாரத் தலம் : பேளூர்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை – கிருத்திகை
சிறப்பம்சம்: வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் 12-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது.
மூலவர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
புகழ் பெற்ற சிற்பங்களை உள்ளடக்கிய இக்கோவில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
வசிஷ்ட ரிஷி வேள்வி ஒன்றினை செய்த காரணத்தால் ‘வேள்வியூர்’ எனப் பெயருற்று,
பின்னர் மருவி ‘வேளூர்’ என்றாகி தற்போது ‘பேளூர்’ என்றழைக்கப்படுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்.
அமைவிடம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்.
முகவரி : அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர் (வழி – வாழப்பாடி) – 636104. சேலம் மாவட்டம்.
