14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
காஞ்சிமாநகரில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ குலத்தினரைக் குறிக்கும். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும், கலியையும் பகைவரது வலியையும் அடக்கி சைவநெறியை எங்கும் பரவச் செய்து நீதி நெறி தழுவாது அரசு புரிந்தார். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் வல்லவர், காலக்கிரமத்தில் உலகத்தை அரசு புரிவது துன்பம் எனக் கருதினார், மனம் சிவனடியார்கள்பால் லயித்தது. உலகயியலில் மனம் ஒட்டவில்லை. எனவே அரசாட்சியை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு திருத்தொண்டு செய்வதில் ஈடுபட்டார்.
பெருமான் கோவில்கள் தோறும் சென்று பல பணிகள் செய்து உள்ளம் உருக வெண்பா பாடல் பாடி வழிபட்டு வந்தார். பூமாலையை விட பாமாலை உயர்ந்தது. ஞான வாசனை வீசுவது. உள்ளத்தை உருக்கி அன்புத்தேனை பெருக்கி நம்மை உய்விப்பது. ஒரு கோவிலுக்கு ஒரு வெண்பா என யாரும் எளிதில் உய்யும் பொருட்டு பாடும் நியமம் கொண்டிருந்தார். பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு தன் தேக யாத்திரையையும் முடித்து இறையடி சேர்ந்தார்.
இறைவன்: ஏகாம்பரநாதர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மா மரம்
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அரசர்
அவதாரத் தலம் : காஞ்சிபுரம்
முக்தி தலம் : திருக்கச்சி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி – மூலம்
இக்கோயிலின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள்:
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்,
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக (பிரித்வி லிங்கம்) போற்றப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த பழமையான சிவத்தலமாகும்.
இந்த ஆலயம் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான மாமரத்தை தலவிருட்சமாகக் கொண்டுள்ளது.
இங்கு சிவபெருமானும் அம்மனும் சுயம்புவாக எழுந்தருளியுள்ளனர்
அமைவிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலும்,
சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கோயில் பரப்பு: சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 172 அடி உயரம் கொண்டது.
வரலாறு: பல்லவர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் கலைநயத்தை இப்பிரமாண்ட கட்டட அமைப்பு
பிரதிபலிக்கிறது.
முகவரி : அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501. காஞ்சிபுரம் மாவட்டம்.
