10. உருத்திர பசுபதி நாயனார்
உருத்திர பசுபதி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார் இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ் செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். திரு உருத்திரம் என்பது 101 வரிகளை உடையது. 51 வரியில் ‘சிவாய’ “சிவதரய” என்று திரு ஐந்தெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படும். இவ் உருத்திரத்தை ஓதியதால் உருத்திரப் பசுபதியார் என்ற பெயர் பெற்றார்.
இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.
இறைவன் பெயர்: அருள்மிகு பாலேசுவரர் (பசுபதிநாதர்) திருக்கோயில்
குலம்: அந்தணர்
பூசை நாள்: புரட்டாசி அசுவினி
அவதாரத் தலம்: தலையூர்
முக்தித் தலம்: தலையூர்
சிறப்புகள் :
சிவபெருமானை நோக்கி தவம் புாிந்த ராவணனுக்கு கடுந்தவத்துக்குப் பிறகு சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தது இத்திருக்கோயிலில் தான்.
இது தேவார வைப்புத் தலமாகும்.
முகவரி: அருள்மிகு பாலேசுவரர் (பசுபதிநாதர்) திருக்கோயில்,திருத்தலையூர், காரைக்கால் சாலை,
கொல்லுமாங்குடி – 609 403,நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ் நாடு.
அமைவிடம்: திருத்துறைப்பூண்டி – திருவாரூர் சாலையில், கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், மாவாட்டுக்குடியை அடுத்து இந்தத் தலம் உள்ளது.
திருத்தலையூர் என்னும் பெயரில் கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் ஓர் ஊரும்,
முசிறி வட்டத்தில் ஓர் ஊரும் உள்ளது. இரண்டு தலங்களிலும் ருத்திர பசுபதி நாயனாரின் சிலைகள் உள்ளன.
இரண்டு தலங்களிலும் பசுபதி நாயனாரின் குருபூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
