9. இளையான்குடி மாற நாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் வழங்குவதை தன் பெருந்தொண்டாக கருதினார். வெளியில் பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது படைப்பார். அறுசுவை உணவு தயாரித்து அடியார் விரும்பும் உணவை பரிமாறி மகிழ்ந்து மகேசுவர வழிபாடு செய்து வந்தார்.

பெருமான் தம் அடியவர்கள் செல்வம் போய் தான் உண்ணாது வாழ்ந்தாலும் தங்கள் கொள்கையை விடமால் அடியவர்க்கு அமுது படைப்பார்கள் என்பதனை உலகுக்கு மாற நாயனார் மூலம் எடுத்துரைக்க விரும்பினார். மாறன் வறுமையுற்றார். செல்வ வளம் சுருங்கியது. அவரின் மனம் சுருங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்ளை அடமானம் வைத்தும் தொண்டு செய்துவந்தார்.

தில்லையிலிருந்து அந்தணர் வடிவில் புறப்பட்ட பெருமான் மாரிக்காலத்து இரவில் மாறன் வீடு வந்து சேர்ந்தார். அங்கு மாறனும் அவர் துணைவியரும் உணவு உண்ணாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று ஈரமேனியைப் போக்க உதவினர். மாறன் நெஞ்சிலே ஈரம் கசிந்தது. மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி, கணவரிடம் இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்றார்.

நாயனார் வயல் வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க அதை அவர் சமைக்க முற்பட்டாா். ஆனால் மழையினால் விறகு ஈரமாக இருப்பதை கணவாிடம் சொன்னாா். கணவர் அவர் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குறும் பயிரான கீரையைக் மழையில் நனைந்தவாறே கொண்டுவந்து கொடுத்தாா் மாறன். இவற்றையெல்லாம் வைத்து வந்த அடியரின் பசியைப் போக்க சுவையான உணவு தயாாித்தாா் மாறன் மனைவி. அம்மையார் தம் கணவரிடம் அடியவரை அமுது உண்ண அழைத்தார்.

அடியவர் மறைந்தார் அங்கு ஓர் சோதி தெரிய இருவரும் திகைத்து நின்றனர். அப்போது ‘நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல்வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்’ என அருள் செய்தார்.

இறைவன்: இராசேந்திர சோழீஸ்வரர்

இறைவி : ஞானாம்பிகை

குலம் : வேளாளர்

தீர்த்தம்: தெய்வ புஷ்கரணி

தல விருட்சம்: வில்வம்

அவதாரத் தலம் : இளையான்குடி

முக்தி தலம் : இளையான்குடி

செய்த தொண்டு : அடியார் வழிபாடு

வரலாறு: அன்னதானம் செய்த பெருமைக்குரிய தலம்

சிறப்பு: இந்திரன் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. இதனால் இவ்வூர் இந்திர அவதாரநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி, மகம்

அமைவிடம்: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பரமக்குடி – காரைக்குடி சாலையில் அமைந்துள்ளது

முகவரி : அருள்மிகு இராசேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

(குறிப்பு: தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் உள்ளது, ஆனால் இளையான்குடி கோயிலே வரலாற்றுச் சிறப்புமிக்க தேவார வைப்புத்தலமாகும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *